"இந்தியத் திரையுலகை சுத்தப்படுத்த வேண்டிய நேரமிது!"- போதைப்பொருள் குறித்து மத்திய அமைச்சர்

"இந்தியத் திரையுலகை சுத்தப்படுத்த வேண்டிய நேரமிது!"- போதைப்பொருள் குறித்து மத்திய அமைச்சர்
"இந்தியத் திரையுலகை சுத்தப்படுத்த வேண்டிய நேரமிது!"- போதைப்பொருள் குறித்து மத்திய அமைச்சர்
Published on

"போதைப்பொருள் பயன்பாடு மிகுதியாக உள்ள இந்தியத் திரையுலகைச் சுத்தப்படுத்த வேண்டிய நேரமிது" என்று மத்திய சமூக நீதி துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பாலிவுட் சினிமாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "ஒட்டுமொத்தமாக திரைத் துறையில்தான் அதிகளவு போதைப்பொருள் விற்பனை நடந்து வருகிறது. இதனால், திரைத் துறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியத் திரையுலகத்தை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டிய நேரமிது.

எனினும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை கைது செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ கூடாது. மாறாக, அவர்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும். மது அருந்துபவர்களும், சிகரெட் புகைப்பவர்களும் சிறைக்கு அனுப்பப்படுவதில்லை. ஆனால், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மட்டுமே சிறைக் கம்பிகளை எண்ணுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்று எங்கள் அமைச்சகம் நம்புகிறது" என்றார்.

தொடர்ந்து அவரிடம் ஆர்யன் கான் விவகாரத்தில் செய்யப்பட்டுள்ள கைது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ``கைதுகள், விசாரணைகள் அரசின் செயல்முறைகள்படியே நடந்து வருகின்றன. வழக்கும் சரியான திசையிலேயே நடந்து வருகின்றன" என்றுள்ளார்.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது விவகாரம் பூதகரமாகி வரும் நிலையில்தான் மத்திய அமைச்சர் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் நேற்று கருத்து தெரிவித்த ராம்தாஸ் அத்வாலே, ``சிறு வயதில் போதைப்பொருள் உட்கொள்வது நல்லதல்ல. ஆர்யன் கானுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. போதை மறுவாழ்வு மையத்திற்கு ஆர்யன் கானை அனுப்புமாறு நான் ஷாருக்கானுக்கு அறிவுறுத்துகிறேன். அவரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, 1-2 மாதங்கள் அங்கு இருக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் போதைப்பழக்கத்தில் இருந்து குணமாகி விடுவார்" என்று ஷாருக்கானுக்கு அட்வைஸ் செய்தார் என்பது கவனத்துக்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com