லோக்சபா தேர்தல் களம் விறுவிறுப்படையும் சூழலில் பாஜக இதுவரை 6 கட்டங்களாக தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னிடம் பணம் இல்லை” என தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் தற்போது கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
இவரது பதவிக்காலம் வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் TIMES NOW Summit 2024-ல் சமீபத்தில் கலந்துகொண்டார் அவர்.
அப்போது பேசிய அவர், “என்னிடம் இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? என்று கேட்டார்கள். எங்கள் கட்சித் தலைவர் இதுபற்றி கேட்டார். ஒரு வாரம் இதுகுறித்து யோசித்துப்பார்த்தேன். பின்பு அவர்களிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, ’தெற்கில் வேண்டுமானால் போட்டியிடுகிறீர்களா? தமிழ்நாடோ, ஆந்திராவோ, நீங்களே தேர்ந்தெடுங்கள்’ என்று கேட்டார். ஆனால் நான் தேர்தலில் போட்டியிடும் அளவு பணம் என்னிடம் இல்லை என சொல்லிவிட்டேன். கட்சியும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.