பல ஆண்டுகாலமாக தீராத பிரச்னையாக உள்ள கச்சத்தீவு விவகாரத்தில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அதை மீண்டும் கையில் எடுத்துள்ளன.
இதன் தொடக்கமாக நேற்று (31.3.2024) ‘இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது’ என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், “இந்தியாவிடம் இருந்து கச்சத்தீவை, காங்கிரஸ் ஆட்சி அலட்சியமாக இலங்கையிடம் விட்டுக் கொடுத்துவிட்டது” என குற்றம்சாட்டி இருந்தார் அண்ணாமலை. இதுதொடர்பாக தன் சமூகவலைதளத்தில் அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து ட்வீட் செய்த பிரதமர் மோடி, “இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகிவுள்ளன” என்று தானும் ஒரு பதிவுபோட்டார்.
பிரதமரின் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை, “கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறும் பிரதமர் மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.
போலவே காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “1974 ஆம் ஆண்டில் நட்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்கதேசத்துடன் இதேபோன்ற ‘நட்பு சைகையை’ மோடி அரசாங்கமும் மேற்கொண்டது” என்றார் .
தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியை சாடி தங்களின் வலைதளப்பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து பாஜக - காங்கிரஸ் இடையேயான வார்த்தைபோராக இது மாறியது.
இந்நிலையில் இன்று காலை புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்கள் மத்தியில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர், “1974 ல் இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கச்சத்தீவு தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தில், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 1974 ல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிப்பதை 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.
முதலில், இந்த பிரச்னை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 6,184 இந்திய மீனவர்களுடன், 1,175 மீன்பிடி படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு விவகாரத்தை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய நிலை இன்று இருந்தாலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்கு அதில் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது போல அணுகுகின்றன.
மீனவர்கள் விடுதலை தொடர்பாக அறிக்கை விடுவது நல்லதுதான். ஆனால் விடுதலைக்கான முழு வேலையும் மத்திய பாஜக அரசுதான் செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகளின் இந்த எதிரெதிர் விவாதங்கள் அரசியல் களத்தில் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.