ஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு

ஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு
ஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு
Published on

ஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சரான பாபுல் சுப்ரியோ கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற சென்றிருந்தார். பல்கலைக் கழக வளாகத்திற்கு நுழைவதற்கு முன்பாகவே, நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு அவருக்கு எதிராக “பாபுல் சுப்ரியோவே திரும்பி போ” என முழக்கமிட்டனர். இதனால், அவர் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக பல்கலைக் கழகத்திற்குள் வந்தார். இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அவருக்கு எதிராக கறுப்புக்கொடியும் காட்டினர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் அரசு நிர்வாகம் என்ற தலைப்பில் சுப்ரியோ உரையாற்றினார். பின்னர், அவர்த் திரும்பி செல்லும் போதும் எதிர்ப்பு முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். அப்போது, மாணவர்கள் அவரது காரை சூழ்ந்து தடுத்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து மத்திய அமைச்சர் சுப்ரியோ கூறிய போது, “நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. பல்கலைக் கழக மாணவர்கள் இதுபோன்று நடந்து கொண்டது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர்கள் என்னுடைய தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களை வெளிப்படையாக நக்சல்கள் என்று கூறிக் கொண்டனர்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com