'பாபிஜி பப்பட்' என்னும் அப்பளம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்’ எனக்கூறிய மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பாபிஜி அப்பளப் பாக்கெட்டுகள் இரண்டை கையில் பிடித்துக் கொண்டு, 'சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும். இந்த அப்பளத்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு பாராட்டுக்கள்’ என தெரிவித்தார்.
அர்ஜுன் ராம் மேக்வாலின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அர்ஜுன் ராம் மேக்வால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அர்ஜுன் ராம் மேக்வால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில், மீண்டும் தொற்று இருப்பதாக அடுத்த சோதனையில் முடிவு வந்துள்ளது. எனது உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும், நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்