இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1.4 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்றும், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கடத்தல் மற்றும் காணாமல் போவது குறித்து நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, 2019-2021க்கு இடைப்பட்ட 3 ஆண்டில் தமிழக உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,40,575 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 1,25,445 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் காணாமல் போன மாநிலத்தின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்திலும், மேற்குவங்க மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 31,678 குழந்தைகள் காணாமல்போன நிலையில், 30,147 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 22,564 குழந்தைகள் காணாமல் போன நிலையில் 20,703 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை இதே காலகட்டத்தில் 4,555 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், இதில் 3,553 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் "டிராக் சைல்டு போர்டல்" (Track Child Portal) எனும் இணையதளத்தை தொடங்கியுள்ளதாகவும், இதன் உறுப்பினர்களாக மத்திய உள்துறை, மத்திய ரயில்வே அமைச்சகங்கள், மாநில & யூனியன் பிரதேச அரசுகள், குழந்தைகள் நல வாரியம், சிறார் குழுக்கள் மற்றும் தேசிய சட்ட ஆணையம் உள்ளிட்டவை உள்ளது என்றும் இந்த குழுவின் நோக்கம் உறவினர்களை கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளை அவர்களுடைய உறவினர்களிடம் எப்படியாவது கொண்டு சேர்ப்பதும் அல்லது அக்குழந்தைக்கு தேவையான கல்வியும் எதிர்கால வளர்ச்சியும் அளிப்பதாகும் என தெரிவித்துள்ளது.