தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புதிய முறைப்படி துறைரீதியாக அனுமதி எதுவும் பெறாமல் நேரடியாக முதலீடுகள் செய்யும் வகையில் வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு 49% மட்டுமே இந்த நேரடி முறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 100 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறுவனங்கள் சுலபமாக அதேசமயம் வேகமாக முதலீடுகளை கொண்டுவரலாம் என தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் புதிய வழிமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், அரசுக்கு செலுத்தவேண்டிய மீதியை செலுத்துவதற்கு 4 வருட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி மற்றும் அபராதமும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் டெலிகாம் பயனாளர்கள் தங்கள் தகவல்களை டிஜிட்டல் முறையிலேயே பதிவுசெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்க ஆகும் செலவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.