12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை தொடங்கியுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க பிரதமர் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. மேலும் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களின் ஆளுநர்களின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதுதவிர, சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக மத்திய பிரதேச மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், அம்மாநிலத்திற்கு தனி ஆளுநரை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தில் ஆளுநராக இருந்த கும்மணம் ராஜசேகரன் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கும் ஆளுநரை நியமிக்க வேண்டியுள்ளது. கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக உள்ள நரசிம்மன், ஏதாவது ஒரு மாநிலத்தில் தன் பதவியைத் தொடரவும், மற்றொருவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட இருப்பவர்களில் பாஜக மிக மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.