அண்மையில் நடந்த மாநில தேர்தல்களில் மத்திய அமைச்சர்கள்
நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வென்றனர். அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பதவி விலகல் கடிதங்களை ஏற்றுக் கொண்டார்.
அத்துடன், பிரதமரின் பரிந்துரையின்பேரில் தோமர் வகித்த வேளாண் துறை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவிற்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல்சக்தித் துறையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூடுதலாக வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை இணை அமைச்சர் ஷோப கரந்தலஜே-விடம் உணவு பதப்படுத்தல் தொழில் துறையும், சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவாரிடம் பழங்குடியினர் நலனும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் மட்டுமின்றி மேலும் 9 பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவர்களது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.