பட்டியலின,பழங்குடியின மக்களுக்கு மாநில அரசுகளே உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளில் 4 பேர், பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்தலாம் என பரிந்துரைத்திருந்தனர்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தேவை இல்லை என்பது "கிரீமிலேயர்" நடைமுறையின் அடிப்படை.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அமலில் உள்ள இந்த நடைமுறையையே, பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டிலும் அமல்படுத்தலாம் என கூறியிருந்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகளின் பரிந்துரையை மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவாகரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தின்படியே இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில், பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறை இல்லை என்பதே, மத்திய அமைச்சரவையின் கருத்து.” என தெரிவித்தார்.
முன்னதாக, பாஜகவின் பட்டியலின, பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு, பிரதமர் மோடியை சந்தித்து, பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினர். அப்போது பிரதமர் மோடியும், கிரீமிலேயர் முறை அமல்படுத்தப்படாது என உறுதியளித்ததாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பகன் சிங் குலஸ்தே தெரிவித்திருக்கிறார்.