கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமூக விலகலை கடைபிடித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். அப்போது பேசிய அவர், “21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவீதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம். சுகாதாராமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். மளிகைக் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமர்ந்துக்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.