மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்கள் ஆடைகள் கலையப்பட்ட நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் 6,000க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாராணையில் மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. விசாரணை எதுவும் முழுமையாக முறையாக நடைபெற்றதாக தெரியவில்லை, கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வாக்குமூலங்கள் பதிவு செய்வதுகூட இன்னும் முடிவடையவில்லை. மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஆதரவு கேட்டுவந்த பெண்களை காவல் துறையினரே வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த காவல் துறையினரை டிஜிபி விசாரித்தாரா” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இவ்விவகாரத்தில் மணிப்பூர் மாநில காவல் துறை தலைவர் டிஜிபி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆகஸ்ட் 7ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில் உயிரிழந்தோர்களின் உடல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் : பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டவர்கள் நம் மக்கள் அல்லவா. அவர்களுக்கான நீதியை நாம் தான் பெற்றுத்தர வேண்டும் என்றார்.
பழங்குடியின மக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ்,
118 பழங்குடியின மக்களின் உடல்கள் இம்பாலில் உள்ள பிணவறையில் உள்ளதாகவும் அவை அழுகுவதாகவும் தெரிவித்தார். உடல்கள் அடையாளம் காணப்படுவதில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
நீதிபதிகள் : உடல்களை அடையாளம் காண்பதில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் சடலங்களை காலவரையின்றி பிணவரையில் வைக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார். அடையாளம் காணப்பட்ட உடல்கள் குறித்தும் எஞ்சியுள்ள உடல்கள் குறித்தும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விவரங்களை அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பாக வாதிடும் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா:
"இதுவரை யாரும் பெற்றுக்கொள்ள முன்வராத உடல்கள் அனைத்தும் ஊடுருவல் செய்தவர்கள். அவர்கள் ஒரு நோக்கத்திற்காக உள்ளே வந்தார்கள். கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு மேல் அதுகுறித்து நான் ஒன்றும் கருத்து தெரிவிக்கவில்லை" எனக் கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகையில் உயிரிழந்தவர்களை ஊடுருவியவர்கள் என சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்து வருகின்றனர்.