காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் மசோதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின்போது, பீகார் மாநில சட்டசபையில் “நிராயுதபாணிகளான எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
”எனது கட்சியின் நிராயுதபாணியான எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போது போலீஸ் மற்றும் உள்ளூர் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது” கூறியுள்ள தேஜஸ்வி யாதவ், சட்டமன்றத்தில் இருந்து தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார்.
"எனது புரட்சிகர எம்.எல்.ஏ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சதீஷ் தாஸ், நிதீஷ் குமாரின் மோசமான செயலால் தாக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்தப் படம் அதற்கு ஆதாரம்" என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சி மெகா கூட்டணி உறுப்பினர்கள், பீகார் சிறப்பு ஆயுத போலீஸ் மசோதா, 2021-ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை செவ்வாய்க்கிழமை ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது.
"நிதிஷின் சர்வாதிகார அரசியலின் உண்மையான கையாக செயல்படக்கூடிய வகையில், போலீசாருக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கும் சட்டம், காவல்துறையினரைப் பயன்படுத்தி அடித்து நொறுக்கப்பட்டு எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதன் மூலம் போலீஸ் பாதுகாப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தேஜஸ்வி யாதவ் இன்று ட்வீட் செய்துள்ளார்.