நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டங்கள், அதனைத்தொடர்ந்த கலவரங்களில் 53 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கலவர வழக்கில் 930 பக்க துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு நபர்கள்மீது அதிர்ச்சி அளிக்கும் குற்றம்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் சிறிது நேரத்தில் பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தால் 53 பேர் உயிர்களை இழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின்னர் காவல்துறையினரால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துணை குற்றப்பத்திரிகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் எனப் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, உமர் காலித் தான் இந்தக் கலவரங்களுக்கு மாஸ்டர் மைண்ட்டாக இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 930 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர்.
அதில், "கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்தார். அவரின் வருகையின்போது டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டு, இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உலகளவில் பரப்ப, இந்த வன்முறையை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோர் இந்த வன்முறைக்கு சதித் திட்டம் தீட்டி கொடுத்துள்ளனர். வன்முறை தொடர்பாக டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித், மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், கலவரத்துக்கான வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காலித் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளில் முன்கூட்டியே சேகரித்துவைத்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் துணை குற்றப்பத்திரிகை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், கிரிமினல் சதி, கொலை, கலவரம், தேச துரோகம், சட்டவிரோதமாக கூடுதல், மதம், மொழி, ஜாதியின் அடிப்படையில் பகையை வளர்ப்பது போன்ற பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஜே.என்.யு மாணவர்களான தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா மற்றும் மாணவர் ஆர்வலர் குல்பிஷா பாத்திமா ஆகியோருக்கு எதிராக செப்டம்பர் மாதம் பிரதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.