அசாமில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் உல்ஃபா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருப்பவர் ஜனார்த்தன் கோகோய் (30). இவரது பெற்றோர் இருவருமே காங்கிரஸ் நிர்வாகிகளாக இருந்து வருகின்றனர். கல்லூரி காலம் தொட்டே இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றியதால் கடந்த ஆண்டு இவர், அசாம் காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, அண்மைக்காலமாக கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்த இவர், காங்கிரஸ் தலைமை குறித்து வெளிப்படையாக விமர்சனமும் செய்து வந்தார். இந்த சூழலில், அசாமில் செயல்படும் உல்ஃபா இயக்கத்தில் தான் இணைந்து விட்டதாக ஜனார்த்தன் இன்று அறிவித்தார். இதுகுறித்து தனது மனைவிக்கு ஃபேஸ்புக்கில் அவர் அனுப்பிய பதிவில், "அசாமீஸ் சமூகம் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அந்த சமூக மக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். எந்த அரசியல் கட்சியும் அவர்களுக்கு உதவ தயாராக இல்லை. அரசியல் கட்சிகளின் உண்மை முகம் எனக்கு தெரியும். அசாமீஸ் சமூகம் அழிவதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அசாமீஸ் சமூகத்தை பாதுகாக்க உல்ஃபா இயக்கத்தில் இணைந்துள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை" என அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ஒருவரே, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருப்பது அசாம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.