இங்கிலாந்தில் மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பிய பெண் மீண்டும் கர்ப்பமானதால், பணியிலிருந்தே நிர்வாகம் அவரை நீக்க உள்ளது. இதனால் இப்பெண்ணுக்கு இழப்பீடாக, 28,706 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்று அந்நாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த நிகிதா ட்விட்சென் என்ற பெண் அக்டோபர் 2021-ஆம் ஆண்டு, First Grade Project என்ற நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக தனது பணியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து ஜூன் 2022-ல் இவர் கர்ப்பம் அடையவே, மகப்பேறு விடுமுறை எடுத்துவிட்டு, சிறிது நாட்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
குழந்தை பிறந்தபின், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் நிகிதா ட்விட்சென். ஆனால் சில தினங்கள் மட்டும்தான், அலுவலகத்திற்கு சென்ற நிகிதா, ஒருநாள் தனது நிர்வாக இயக்குனர் ஜெர்மி மோர்கனுடன் கலந்துரையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது, தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், கர்ப்பமுற்று எட்டு வாரங்கள் ஆகிவிட்டதாகவும் நிகிதா கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெர்மி, மீண்டும் நிகிதா விடுப்பு எடுப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் விடுப்பு கொடுத்துள்ளார்.
அதன்படி, நிகிதாவின் அடுத்த மகப்பேறு விடுப்பு மார்ச் 26, 2023-ஆம் தேதி முடிவந்துள்ளது. தொடர்ந்து தான் மீண்டும் பணிக்கு திரும்புவோம் என்று நிகிதா நம்பியுள்ளார். ஆனால், அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, ஏப்ரல் 4-ஆம் தேதி இது குறித்து தனது முதலாளிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கும் எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து ஏப்ரல் 18-ஆம் தேதி “நிறுவனத்தின் நிதி பற்றக்குறை போன்ற காரணங்களை முன்னிறுத்தி நிகிதாவை பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்கிறோம்” என ஜெர்மி மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதனால், வேலையில்லாமல் இருந்த நிகிதா சலவை செய்யும் இடம், பூங்கா போன்ற இடங்களில் தற்காலிகமாக வேலைக்கு சேரவே இரு கைக்குழந்தைகளோடு மிகவும் கடினமாக நாட்களை கழித்துள்ளார். இந்த நிலையில், வேலை வாய்ப்பு தீர்பாயத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் நிகிதா. அதுவும் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது, தகுந்த காரணங்கள் இல்லாமல் வேலையிலிருந்து தன்னை நிர்வாகம் விடுவித்ததாகவும், எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் கொடுக்கவில்லை எனவும், கர்ப்பகாலத்தில் வேலையில்லாமல், நிதியும் இல்லாமல் தான் கஷ்டங்களை சந்தித்ததாகவும் நிகிதா தெரிவித்துள்ளார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், “நிகிதாவின் பணிநீக்கம் நியாமற்றது மற்றும் பாரபட்சமானது. அவரது மகப்பேறு என்ற கடினமான காலங்களில், கவலையையும் துயரத்தையும் அவருக்கு கூடுதல் சுமையாக கொடுத்துள்ளீர்கள். எனவே, first Grade Project மற்றும் ஜெர்சி மோர்கன் இருவரும் இணைந்து நிகிதாவிற்கு 28,706 பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டார்.