நாகலாந்தின் 200 வருடத்துக்கு முந்தைய நாகா மனிதனின் மண்டை ஓட்டை, நாளை இங்கிலாந்து கலைக்கூடம் ஏலம் விட திட்டமிட்டிருந்தது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நாகாலாந்தின் முதல்வர் நெய்பியூ ரியோ கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்தியாவின் எதிர்ப்புகளை அடுத்து, இங்கிலாந்தில் ஏலம் தடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாகா சமூகத்தை சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் நாளை ஏலம் விடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இது நாகா பழங்குடியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாகா மனித எச்சங்களின் மதிப்பு 3,500 - 4,000 UK பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து நெய்பியூ ரியோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், “இறந்தவரின் உடல் மீதி அனைத்தும் நாகா மக்களுக்கே சொந்தம். அதனை ஏலம் விடுவது மனிதத்தன்மை அற்ற செயல். இத்தகைய செயல் நாகா மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக உள்ளது. ஆகவே இந்த ஏலத்தை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என கோரி இருந்தார்.
இதேபோல பல்வேறு ஆய்வாளர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பிரிட்டணிலுள்ள மண்டை ஓட்டை அந்நாட்டு அரசு திருப்பித்தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, அந்த மண்டை ஓடு ஏலம் விடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.