யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 18-ஆம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 25-ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சி.எஸ்.ஐ.ஆர். யுஜிசி நெட் தேர்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி. ”என்.சி.இ.டி. தேர்வு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சி.எஸ்.ஐ.ஆர். யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையிலும், ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.” என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
அனைத்து தேர்வுகளும் கணினி வழியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 6-ல் நடக்கும் என புதிய கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.