மகாராஷ்டிர மாநிலத்தில் என்ஆர்சி-யை அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே மறுபடியும் தெளிவுபட கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவசேனா போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளுக்கும் சாதகமாக அமையவில்லை. ஆகவே முதல்வர் பதவி குறித்து இரு கட்சியிடையே சர்ச்சை ஏற்பட்டது. சிவசேனா கட்சி பாஜக கட்சியுடனான உறவை முறித்து கொண்டது. அதனை அடுத்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் உத்தவ் தாக்ரே முதல்வராக பொறுப்பு ஏற்றார். இதில் இருந்தே சிவசேனா கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடுமையான கருத்து வேற்றுமைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்ஆர்சி-யை தங்களின் மாநிலத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்துள்ளார். மேலும் இது யாரிடமிருந்தும் குடியுரிமை உரிமைகளை பறிப்பதைப் பற்றியது அல்ல; அது அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆனதாகும் என விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாமனா’விற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் வெளியாகி உள்ளது. இதே பேட்டியில் என்ஆர்சி குறித்த கேள்விக்கு ‘குடியுரிமையை நிரூபிப்பது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடினமாக இருக்கும். ஆகவே நான் அதை நடக்க விடமாட்டேன்” என்று பேசியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் ஏற்கெனவே நாடு முழுவதும் கிளம்பி உள்ளன. பல இடங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்சியாக உத்தவ் தாக்ரேவும் தங்களது மாநிலத்தில் என்ஆர்சியை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருப்பதை பெரிய பின்னடைவாக அரசியல் விமர்சகர்கள் கருகின்றனர்.