உதய்பூர் கொலையாளிகளை நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்பவரை கடந்த வாரம் இரு நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். அதனை வீடியோவாகவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர். முகமது நபி குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் கன்னையா லாலை தாங்கள் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளான கவுஸ் முகமது, ரியாஸ் கட்டாரி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அவர்கள் இருவரையும் ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை வரும் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர், சிறையில் அடைப்பதற்காக அவர்களை நீதிமன்றத்தில் இருந்து போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், கொலையாளிகளை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, போலீஸார் வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தி கொலையாளிகளை மீட்டு கொண்டு சென்றனர்.
Source: NDTV