ராஜஸ்தானில் தையல் கடைக்காரரை கொலை செய்தது பாகிஸ்தானின் ஸ்லீப்பர்செல்கள் என்று இந்திய உளவு அமைப்புகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரைச் சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவரை இரண்டு பேர் நேற்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அவரை கொலை செய்த வீடியோவையும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்ஐஏ அமைப்பும் இந்த சம்பவம் குறித்து தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் குறித்து பரபரப்பான தகவல்களை இந்திய அளவு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. அதாவது, உதய்பூரில் கன்னையா லாலை கொலை செய்தது, பாகிஸ்தானில் செயல்படும் ஒரு தீவிரவாத அமைப்பின் 'ஸ்லீப்பர்செல்கள்' என 'ரா' உளவு அமைப்பு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் என்ஐஏ அமைப்பும் இறங்கியுள்ளது. விரைவில் இதுதொடர்பான உண்மைகள் வெளிவரும் என மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'உடனடியாக தூக்கில் போடுங்கள்'
இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்தவர்களை 4 நாட்களில் தூக்கில் போட வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறியுள்ளார்.