உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்

உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்
உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்
Published on

ராஜஸ்தானின் உதய்பூரில் தையல் கடை உரிமையாளர் கன்னையா லாலை படுகொலை வழக்கில் கைதான முகம்மது ரியாஸ் அட்டாரி ஆகிய இருவரையும் வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய இறை தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னையாவை, ராஜஸ்தானைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி (38), கவுஸ் முகம்மது (39) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலில் கொலை செய்தனர்.

அடுத்த சில மணி நேரங்களில் கொலையாளிகள் இருவரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், நபிகள் நாயகத்தைத் தவறாகப் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்தக் கொலையைச் செய்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், பிரதமர் மோடி, நுபுர் ஷர்மா ஆகியோருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து, கொலை நடந்த அன்று இரவே வீடியோ வெளியிட்ட இருவரையும் கைது செய்தது ராஜஸ்தான் காவல்துறை. இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலையாளிகள் முகம்மது ரியாஸ் அத்தரி மற்றும்  கவுஸ் முகம்மது இருவரும் நேற்று மாலை உதய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் ஜூலை 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அச்சமயத்தில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று  கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கிய அவர், கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னையா லாலின் மகன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அசோக் கெலாட் உறுதி அளித்ததாக கூறினார்.

இதையும் படிக்கலாம்: டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com