மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அமையவுள்ள ஆட்சிகளை தீர்மானிக்கப்போவது அரசியலில் சமீபத்தில் கால் பதித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அரசியல் வாரிசுகள்தான்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி ஏற்படும்போதே ஆட்சிப் பொறுப்பில் பாதிக்கு பாதி என ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்முறையாக, சிவசேனாவை தோற்றுவித்த தாக்கரே குடும்பத்திலிருந்து போட்டியிட்ட 28 வயதான ஆதித்யா தாக்கரே முதல் இரண்டரை ஆண்டுகளில் துணை முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிராவில் 105 இடங்களில் வெற்றிப் பெற்று அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளதால், சிவசேனாவின் கோரிக்கையை ஏற்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், பெரும்பான்மைக்கு 40 இடங்கள் குறைவாக உள்ளதால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் உதவி பாரதிய ஜனதா கட்சிக்கு கட்டாயமாகத் தேவைப்படுகிறது. எனவே, சிவசேனாவின் கோட்டையாக கருதப்படும் வொர்லி தொகுதியில் 67 ஆயிரத்து 421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற ஆதித்யா தாக்கரேதான் மகாராஷ்டிராவில் ஆட்சியை தீர்மானிக்க உள்ள முக்கிய நபராக உருவாகியுள்ளார். அவர் துணை முதல்வராவாரா? இரண்டரை ஆண்டுகள் முதல்வராவாரா? இரு கட்சிகளின் டீல் என்ன என்பது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த ஹரியானா மாநிலத்தில், கட்சி தொடங்கி 11 மாதங்களே ஆன ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா, அம்மாநிலத்தின் ஆட்சியைத் தீர்மானிப்பவராக மாறியிருக்கிறார். ஹரியானாவில் பாரதிய ஜனதா 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனநாயக ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாததால், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் உதவியை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாடி வருகின்றன. அதேநேரம், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பாஜக, சுயேச்சைகளை தன்வசப்படுத்திக் கொண்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமலும் இல்லை. சுயேச்சைகள் அனைவருமே பாஜக பக்கம் செல்வார்களா எனத் தெரியாத நிலையில், துஷ்யந்த் சவுதாலா ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவும், அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் உத்தவ் தாக்கரேவும் தேர்தலில் போட்டியிடாத நிலையில், தனது சொந்த விருப்பத்தில் அக்குடும்பத்தில் இருந்து போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிர மாநில அரசியல் வானில் நட்சத்திரமாக மாறியுள்ளார். அதேபோல, இந்திய தேசிய லோக் தளக் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலாவும் மிக குறுகிய காலத்தில் ஹரியானா மாநில அரசியலில் கிங் மேக்கராக மாறியுள்ளார்.