99 மதிப்பெண்களுக்கு பதில் பூஜ்ஜியம் மதிப்பெண் என தவறுதலாக பதிவிட்ட ஆசிரியை தெலுங்கானாவில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளில் ஏராளமான மாணவர்கள் தோல்வியை தழுவினர். தோல்வி காரணமாக 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் இறந்த மாணவர்களின் உடலுடன் பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் 3 லட்சம் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
இதில் பல மாணவர்களின் மதிப்பெண்கள் தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பணி நேரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 99 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு 0 மதிப்பெண் மட்டுமே போட்டுள்ள உமா தேவி என்ற ஆசிரியையை தெலுங்கானா இடைநிலைக் கல்வி வாரியம் பணிநீக்கம் செய்துள்ளது. அத்துடன் அவரை பள்ளி நிர்வாகம் பணியை விட்டு நீக்கியுள்ளது. கூடுதலாக அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பழங்குடியினர் நல்வாழ் பள்ளியில் தேர்ச்சி பெற்ற சில மாணவர்களின் பெயரை, தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலில் தவறுதலாக சேர்த்து அதனை நோட்டீஸ் பலகையில் ஒட்டிய விஜயகுமார் என்ற பள்ளி நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.