ஒடிசா ரயில் விபத்தை போன்றதொரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில் மீது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகபள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நின்றுள்ளது. அப்போது குண்டூரிலிருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயிலும் அதே பாதையில் வந்ததால் பலாசா பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகள் 8 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது மோதியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிக்னல் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுத்தி வைக்கப்பட்ட பேசஞ்சர் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
விபத்து நடந்த இடத்தில் ரயில்வே மீட்பு படையினர், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருள் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஒடிசாவின் பாலாசோரில் ரயில்கள் மோதி நடந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தும் ஒடிசா விபத்தை போன்றதொரு விபத்து என்று கூறப்படுகிறது.
ஆந்திராவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தமது இரங்கல் செய்தியில், “ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்; விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அருகில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.