டிராக்டர் பேரணி வன்முறை எதிரொலி: 2 வேளாண் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகல்

டிராக்டர் பேரணி வன்முறை எதிரொலி: 2 வேளாண் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகல்
டிராக்டர் பேரணி வன்முறை எதிரொலி: 2 வேளாண் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகல்
Published on

டிராக்டர் பேரணி வன்முறையில் நிறைவடைந்ததால் இரண்டு வேளாண் சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகினர். காஜிப்பூரில் போராடி வந்த விவசாயிகள் சிலர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்றைய தினம் 64-ஆவது நாளை எட்டியிருக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் நிறைவடைந்தது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் பல நூறு பேர் காயமடைந்தனர். வேறு திசையில் செல்லும் இந்தப் போராட்டத்தில் மேற்கொண்டு தங்களால் ஈடுபட முடியாது என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனும் அமைப்பைச் சேர்ந்த வி.எம்.சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பாரதிய கிசான் சங்கத்தின் ஒரு பிரிவும் இந்த போராட்டத்தில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்துள்ளது. பாரதிய கிசான் சங் (பானு) பிரிவின் தாக்கூர் பானு பிரதாப் சிங், சில்லா எல்லையில் தங்கள் முற்றுகையை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டெல்லி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

செங்கோட்டையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு புனரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் பார்வைக்காக செங்கோட்டை தற்போது திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வோம் என்ற அறிவிப்பை விவசாயிகள் திரும்பப் பெற்றனர். அமைதியான முறையில் தர்ணா போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகியதால் டெல்லி - உத்தரப்பிரதேசம் எல்லையான காஜிப்பூரில் விவசாயிகளின் கூட்டம் குறைந்தது.

அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு தன்னுடைய நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான கருத்துகளை விவசாயிகள் மற்றும் நிபுணர்கள் இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. தலைநகரை பொருத்தமட்டில் இணையதள சேவை என்பது மீண்டும் முழுமையாக
செயல்பட தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com