“நிர்வாண படங்களை அழித்தது ஏன்?” ரூபா ஐபிஎஸ் Vs ரோஹினி ஐஏஎஸ்..டிரான்ஸ்ஃபரில் முடிந்த மோதல்!

“நிர்வாண படங்களை அழித்தது ஏன்?” ரூபா ஐபிஎஸ் Vs ரோஹினி ஐஏஎஸ்..டிரான்ஸ்ஃபரில் முடிந்த மோதல்!
“நிர்வாண படங்களை அழித்தது ஏன்?” ரூபா ஐபிஎஸ் Vs ரோஹினி ஐஏஎஸ்..டிரான்ஸ்ஃபரில் முடிந்த மோதல்!
Published on

இரு உயர்மட்ட பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமான நிலையில் இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடங்கியது எங்கே?

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர மோதல் முற்றியுள்ளது. ரூபா தனது சமூக வலைத்தள பதிவில், அறநிலையத்துறை கமிஷனராக இருக்கும் ரோகிணி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதில், ஐஏஎஸ் அதிகாரி ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்தார்' எனவும் குற்றஞ்சாட்டி, படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதையடுத்து, ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார். இந்நிலையில், ரோகிணியின் அந்தரங்க படங்களை வெளியிட்டது தொடர்பாக ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி பெங்களூரு காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

முற்றியது அதிகாரிகளின் மோதல்!

ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ரோகிணியிடம் கேட்ட போது, 'ரூபா விரைவில் குணம் அடைய வாழ்த்துகள்' என்றார். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரூபா, நேற்று தன் ஃபேஸ்புக் பதிவில், 'நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா? சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம் என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார்' என குறிப்பிட்டுள்ளார்.

இருவரிடமும் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' 

இரு உயர்மட்ட பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமான நிலையில் மாநில அரசு தலையிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, இருவரிடமும் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.

’ரூபா கூறிய அனைத்தும் பொய்’ - ரோகிணி சிந்தூரி!

இந்த பரபரப்பான சூழலில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி , நேற்று தலைமைச் செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து, ரூபா மீது புகார் கடிதம் கொடுத்துள்ளார். இது பற்றி ரோகிணி கூறுகையில், ''என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை. என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்கிறார். இதுகுறித்து தலைமைச்  செயலரிடம் விளக்கம் அளித்து உள்ளேன்,'' என்றார்.

’தனிப்பட்ட பகை இல்லை; அவருக்கு தண்டனை வேண்டும்’ - ரூபா

ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி சென்ற சிறிது நேரத்தில் வந்த ரூபாவும் தலைமைச் செயலரை சந்தித்து பேசினார். ரோகிணி மீது ஏழு குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.

பின் அவர் கூறுகையில், ''ரோகிணி சிந்தூரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன். அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும். ''ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன்'' என்றார்.

”தவறானவற்றைப் பரப்பாதீர்கள்” - ரூபா ட்வீட்

இப்படியான சூழலில் நேற்று இரவு ரூபா தனது ட்விட்டர் பதிவில் ‘ரோகிணியின் ஊழல் குறித்த எனது புகார்கள் ஏற்கெனவே பொதுத்தளத்தில் இருக்கின்றன. ஆனால், தயவுசெய்து தவறானவற்றைப் பரப்பாதீர்கள். அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன்’’ எனப் பதிவிட்டு, தலைமைச் செயலருக்கு அவர் அனுப்பியதாக, 3 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் பதிவிட்டிருக்கிறார்.

இருவர் மீதும் பாய்ந்தது அதிரடி நடவடிக்கை!

இச்சூழலில் கர்நாடகாவில் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி ஆகிய இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதாவது, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் கணவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான முனீஸ் முட்கிலும் இடமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக அரசின் நிலஅளவைத்துறை ஆணையராக இருந்த முனீஸ் முட்கில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.  

ரோகிணி vs ரூபா .. தொடரும் சர்ச்சைகள்

ஏற்கனவே மைசூரில் பணிபுரிந்தபோது சக பெண் அதிகாரியான ஷில்பா நாக் என்பவருடன் ஏற்பட்ட மோதலால் இடமாற்றம் செய்யப்பட்டவர் ரோகிணி. தற்போது ரூபா ஐபிஎஸ் உடன் ஏற்பட்ட மோதலில் மீண்டும் ரோகிணி மாற்றப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகை பெற்றதாக குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 20 வருட சர்வீஸில் 40 முறை டிரான்ஸ்ஃபர்... - ரூபா ஐ.பி.எஸ் 'சமரசமற்ற' பயணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com