பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி நீக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஷமிகா ரவி பொருளாதார மந்த நிலை குறித்தும், மத்திய அரசின் சில முடிவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி வந்தார். பொருளாதார மந்தநிலை குறித்து, “நமது பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.
அத்துடன் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்த்திருத்தம் செய்யவேண்டும். பொருளாதார வளர்ச்சியை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கு துறையின் கையில் விடுவது போல இருக்கும்” என தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
அதேபோல், இ-சிகரெட் தடை செய்யப்பட்டதற்கும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். இ-சிகரெட்டுக்கு எதிரான ட்விட்டர் பதிவில்,“அதிக வரி விதிக்கப்படும் போது தடை எதற்கு?. மற்ற புகையிலை பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிப்பது வினோதமானது. சுகாதார அல்லது நிதி இரண்டில் எந்த அடிப்படையில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. இதில் உள்ள லாஜிக் என்ன?” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ஷமிகா ரவி நீக்கப்பட்டுள்ளார். மாற்றி அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரத்தின் ராய் மற்றும் ஷமிகா ரவி இடம்பெறவில்லை. ஷமிகா நீக்கப்பட்டுள்ளதை அடுத்து சஜ்ஜித் சினாய் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.