பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு-உ.பி யில் அதிர்ச்சி

பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு-உ.பி யில் அதிர்ச்சி
பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு-உ.பி யில் அதிர்ச்சி
Published on

உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூனம் (15), மனிஷா (17) ஆகிய இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்களின் தாயார் மாயா தேவி, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்திச் சென்றுள்ளனர் என்றும், அவர்கள் தான் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் கிடைத்ததும் லக்கிம்பூர் கேரி மாவட்ட எஸ்பி சஞ்சீவ் சுமன், கூடுதல் எஸ்பி அருண்குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,

இது குறித்து பேசிய உபி ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார், ” சம்பவம் குறித்த ஆதாரங்களை சேகரிக்க போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது. லக்கிம்பூரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மரத்தில் இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெண்களின் குடும்பத்தார் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். மற்றும் அனைத்து விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும்'' என்றார்.

மேலும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், உறவினர்களும் ஊர் மக்களும் ரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பெண்கள் பாதுகாப்பு குறித்து வெற்றுக் கூற்றுக்களை கூறிய உ.பி முதல்வரின் உண்மை தற்போது வெளிப்பட்டிருக்கிறது. யோகி அரசில், குண்டர்கள் தாய்மார்களையும் சகோதரிகளையும் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தை அரசு விரைவில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கண்காணிப்பின் கீழ், உ.பி. குற்றங்களின் தலைநகராக மாறி வருகிறது. நிர்வாகம் மற்றும் காவல்துறையின் காது கேளாத மௌனத்தால் மக்கள் சாலையில் வந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இந்த சம்பவம் தொடர்பாக உ.பி.யில் உள்ள பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார், மேலும் மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com