திறந்தவெளியில் மலம் கழித்த குழந்தைகள் கொடூரமான முறையில் கொலை
இரண்டு பட்டியலின குழந்தைகள் பொது இடத்தில் மலம் கழித்தற்காக கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்பூரி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 10வயது சிறுவனும் அவருடைய சகோதரியான 12வயது சிறுமியும் பொது இடத்தில் மலம் கழித்ததற்காக அடித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஹகிம் யாதவ் மற்றும் ரமேஷ்வர் யாதவ் ஆகிய இரு சகோதரர்களை கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தைகளின் தந்தை வால்மிகி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அதில், “ஹகிம் மற்றும் ரமேஷ்வர் சகோதரர்கள் தனது குழந்தைகள் பொது வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக குச்சியை வைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சகோதரர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் மீது ஐபிசி 302 மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் யாரும் பொதுவெளியில் மலம் கழிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கென்வே அறிவித்திருந்தார்.
எனினும் இந்தக் குழந்தைகளின் தந்தை வால்மிகி, “தங்களின் வீட்டில் கழிப்பறை இல்லை. அத்துடன் இந்தக் கிராமத்தில் பட்டியலின மக்கள் ஒதுக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் சாதியினர் அனுமதி பெற்றால் மட்டுமே தண்ணீர் பிடிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஐஜி ராஜாபாபு சிங் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ஹகிம் மற்றும் ரமேஷ்வர் சகோதரர்கள் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளனர். ஆனால் இதற்கும் பொதுவெளியில் மலம் கழிப்பதற்கு சம்பந்தம் இல்லை. ஹகிம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார். எனினும் சிவ்பூரி எஸ்பி ராஜேஷ் சந்தல், “இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் முன்விரோதம் எதுவும் இல்லை. அத்துடன் ஹகிம் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று மாறுபட்ட தகவலை அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, “உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை அடக்கம் செய்ய 10ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் குடும்பத்திற்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரண தொகையாக 4 லட்சம் வழங்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளார்.