கார் டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூர் பகுதியின் ஜிகானியில் ரமேஷ்(36) என்ற கார் ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு அருகில் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முனியப்பா(37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ரமேஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த சம்பவம் சரியாக இரவு 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. அப்போது ரமேஷ் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டு வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் இவரை முனியப்பா தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷின் மனைவி கலாவதி முனியப்பாவுடன் வீட்டை விட்டு சென்று தனியாக வாழ்ந்துள்ளார். கலாவதிக்கும் முனியப்பாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் உள்ளூர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து மனைவி கலாவதி மீண்டும் ரமேஷ் உடன் வந்து வாழ்ந்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவத்திற்கு பிறகு முனியப்பாவின் வீட்டில் தசாரா விழா நடைபெற்ற போது ரமேஷ் அங்கு சென்று முனியப்பாவை அவரது உறவினர்கள் முன் திட்டி அவமான படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ரமேஷை கொலை செய்ய முனியப்பா திட்டுமிட்டுள்ளார். அதன்படி நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.