மகாராஷ்ட்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் கடந்த சில நாள்களுக்கு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் இருவர் மட்டும் ஒருவிதமான மிதக்கும் படுக்கையில் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையில் ஏற்கெனவே பெய்ய வேண்டிய பருவ மழையில் ஆகஸ்ட் முதல் 5 நாட்களில் மட்டும் 64 சதவித மழையைப் பெற்று விட்டது. தெற்கு மும்பை பகுதிதான் இதன் கொடுமையை அனுபவித்து வருகிறது. சாந்தாகுரூஸில் 162.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றுடன் கனமழை பெய்யுமென்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பெரிய கட்டங்களில் இருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மும்பையின் தெற்குப் பகுதி மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
இந்நிலையில் மும்பை வெள்ளம் சூழந்த பகுதியில் இரு ஆண்கள் மிதக்கும் வகையிலான படுக்கையில், படுத்துக்கொண்டே பேசியபடியே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் "இந்தச் சூழ்நிலையிலும் இவ்வளவு ஜாலியாக பயணம் செய்கிறார்கள்" என பலரும் வேடிக்கையாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.