விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. மேலும் சில விளக்கங்களையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தின் போது அவதூறு பதிவுகளை பதிவிட்டதாக 1000க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் மேலும் சில விளக்கங்களையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், ''வெளிப்படைத்தன்மையே ஆரோக்கியமான பொதுத்தள உரையாடலுக்கு அடித்தளம். ட்விட்டர் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான கணக்குகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வன்முறை, துஷ்பிரயோகம், தீங்கு விளைவிக்கலாம் என்பது போலான பதிவுகள் கொண்ட ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் நூறு மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்டுகள் வெளியிடப்படுவதால், பயனர் வெளிப்பாட்டை மதிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. அதேநேரத்தில் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியுள்ளோம். முடக்கப்பட்ட கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அந்தக்கணக்குகள் பயன்பாட்டிலேயே இருக்கும். இருப்பினும், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொதுத்தளத்தில் பயனாளர்கள் சுதந்திரமான கருத்துப்பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதரிக்கிறோம். அதனை அரசின் விதிகளுக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்கிறோம்'' என தெரிவித்துள்ளது. மேலும் பல விளக்கங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.