திருமண நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சமாக இருப்பதே சாப்பாடுதான். எந்த விஷேசங்களுக்கு சென்றாலும் “எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க” என்ற கேள்வியே முந்திக்கொண்டு கேட்கப்படுவதாக இருக்கும்.
கல்யாண நிகழ்வுகளில் போடப்படும் சாப்பாடு வழக்கமாக சாப்பிடும் உணவை விட வகை வகையான மெனுக்களில் இருக்கும் என்பதாலேயே எவரும் திருமணத்துக்கு செல்வதை தவிர்க்காமல் இருப்பதும் ஒரு வழக்கமாகத்தான் உள்ளது.
ஆனால் என்னதான் வகை வகையான உணவுகள் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் எவராலும் சாப்பிட முடியாமலேயே போய்விடும். இதனால் ஆயிரக்கணக்கானோருக்காக சமைக்கப்பட்ட உணவு வகைகள் பெரும்பாலும் வீணாகவே போய்விடுகின்றன.
கூடுமானவரை எஞ்சும் உணவு பண்டங்கள் அருகாமையில் இருக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கோ அல்லது ஆசிரமங்களுக்கோ கொடுக்கப்பட்டாலும் பரிமாறப்பட்ட உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
வேண்டுமென்ற அளவுக்கு மட்டும் வாங்கி சாப்பிடாமல் இருக்கும் எல்லா பண்டங்களையும் கொட்டி சாப்பிட முடியாமல் சாப்பிட்டு கடைசியில் அதை மிச்சம் வைத்து விடுகிறார்கள். இப்படியான ஒரு நிகழ்வு குறித்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சத்தீஸ்கரை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவானிஷ் ஷரண் காட்டமாக கேப்ஷனும் இட்டிருக்கிறார்.
அதில் ஒரு மேஜை முழுக்க உள்ள தட்டுகளில் பாதிக்குமேல் சாப்பிடாமல் இருந்த உணவுகளின் போட்டோவை பகிர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, “இப்படியான ஆட்களை முதலில் இதுப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தடை செய்யவேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். அதில், “தட்டுகளின் அளவை சிறிதாக்கினால் இரண்டு முறையாக சென்று கூட உணவை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் பல பேர் இருக்கிறார்கள்.” என்றும், “உணவு பொருட்களை வீணாக்குவது முற்றிலும் குற்றம். ஆனால் அதற்கான சட்டம்தான் இங்கு இல்லை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.