சிறையில் இருந்த பகத் சிங்கை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் பொய் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வரலாற்று ரீதியில் தவறான தகவலை கூறி சிக்கியுள்ளார். ஏற்கனவே, சுதந்திரத்திற்கு பின் ராணுவ தளபதியாக இருந்த திம்மையாவை அப்போதையை பிரதமர் நேரு அவமானப்படுத்தினார் என்று பிரதமர் மோடி பரப்புரையின் போது பேசியிருந்தார். மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது வரலாற்று ஆசிரியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையாக நடந்த வரலாற்றையும் பலர் கட்டுரையாக எழுதி மோடிக்கு நினைவூட்டினர்.
இந்நிலையில், மற்றொரு வரலாற்று ரீதியான தவறான தகவலை மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி கடந்த மே 9ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார். “பகத் சிங், பட்டுகேஷ்வர், வீர் சவர்கர் போன்ற தலைவர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடி சிறையில் இருந்த போது, எந்தக் காங்கிரஸ் தலைவராவது அவர்களை சென்று பார்த்தார்களா? ஆனால், ஊழலில் சிக்கி சிறை சென்றவர்களை சிறைக்கு சென்று காங்கிரஸ் தலைவர்கள் பார்த்து வருகிறார்கள்” என்று அந்த ட்விட்டில் பதிவிட்டிருந்தார். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிதார் பகுதியில் நடைபெற்ற பரப்புரையின் போதும் இந்தக் கருத்தை கூறியிருந்தார். பிரதமர் மோடி கூறியுள்ள கருத்து தவறானது என்று பலரும் ட்விட்டரில் ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் பகத் சிங்கை பார்த்தார்களா?
ஜவஹர்லால் நேரு, சிறையில் இருந்த பகத் சிங், பட்டுகேஷ்வர் தத் உள்ளிட்டவர்களை 1929ம் ஆண்டு நேரில் சென்று பார்த்துள்ளார். இந்தத் தகவலை தனது சுயசரிதை நூலில் (Toward Freedom: The Autobiography of Jawaharlal Nehru) அவர் பதிவு செய்துள்ளார். நேரு தனது புத்தகத்தில், “லாகூர் சிறையில் இருந்த கைதிகளை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதே அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உண்ணாவிரதத்தை முடித்து இருந்தார்கள். சில கைதிகளை மட்டும் பார்க்க எனக்கு அனுமதி அளித்தார்கள். அப்பொழுதுதான் பகத் சிங்கை நான் முதல்முறையாக பார்த்தேன். ஜதிந்திர நாத் உள்ளிட்ட சில தலைவர்களையும் நான் பார்த்தேன். அப்பொழுது அவர்கள் மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார்கள். பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பகத் சிங்கிற்கு மிகவும் கவர்ச்சிகரமான அறிவாளியின் முகம். மிகவும் அமைதியாக அந்த முகம் காணப்பட்டது. அவர் முகத்தில் எவ்வித கோபமும் இல்லை. சிறந்த ஜெண்டில்மேனை போலவே அவர் பார்வையும் பேச்சும் இருந்தது” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார் நேரு.
அதேபோல, நேரு லாகூர் சிறையில் இருந்த பகத் சிங் மற்றும் பட்டுகேஷ்வர் தத்தை சந்தித்ததை லாகூரில் வெளியான தி டிரிபுன் இதழ் செய்தி வெளியிட்டது.
லாகூர் சதி வழக்கில் கைதாகி சிறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை ஜவஹர்லால் நேரு, கோபி சந்த் உள்ளிட்ட தலைவர்கள் சென்று பார்த்தார்கள் என்று அந்தச் செய்தி கூறுகிறது. லாகூர் மத்திய சிறையை அடுத்து, போர்ஷ்டல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் நேரு பார்த்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜதின் தாஸ், அஜோய் கோஷ் மற்றும் சிவ வர்மா உள்ளிட்டோரையும் அவர் பார்வையிட்டார்.
சிறையில் இருந்தவர்களை பார்வையிட்ட பின்னர் ஆகஸ்ட் 10ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நேரு, சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் நிலைமையை விவரித்தார். ‘பகத் சிங்கை புரிந்து கொள்ளுதல்’என்ற புத்தகத்தை எழுதிய ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் சமன் லால் கூறுகையில், “பகத் சிங் காங்கிரஸ் கட்சியுடன் அன்பும், வெறுப்பும் கொண்ட உறவில் இருந்தார். பகத் சிங் குடும்பத்தில் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். பகத் சிங்கின் தந்தை ஒரு காங்கிரஸ்காரர். தனது தந்தையுடன் பல காங்கிரஸ் கூட்டங்களில் அவரும் கலந்து கொண்டார். லாகூர் சதி வழக்கு விசாரணையின் போது மோதிலால் நேரும், ஜவஹர்லால் நேரும் பகத் சிங் உள்ளிட்டவர்களை பல முறையில் பார்த்துள்ளனர். சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த ஜதின் தாஸ் இறுதி சடங்கில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த கோபி சந்த் பார்கவ் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கும் பகத் சிங்கிற்கு நிறைய வேற்றுமைகள் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிரதமர் மோடி கூறியதில் எவ்வித உண்மையும் இல்லை” என்றார்.