ஷேர்சாட்-க்கு சொந்தமான மோஜ் செயலியை டிக் டாக்குக்கு மாற்றாக உலகளவில் களமிறக்க ட்விட்டர் விரும்புகிறது.
ட்விட்டர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளமான ஷேர்சாட்டை விலைக்கு வாங்க திட்டமிட்டு வருகிறது. ஷேர்சாட்டை கைப்பற்றுவதன் மூலம், அதற்கு சொந்தமான மோஜ் செயலியை, டிக் டாக்குக்கு மாற்றாக உலகளவில் களமிறக்க ட்விட்டர் விரும்புவதாக ‘டெக் க்ரஞ்ச்’ தெரிவித்துள்ளது.
இதற்காக 1.1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய ட்விட்டர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக ட்விட்டர் அல்லது ஷேர்சாட் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றும் டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 160 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஷேர்சாட், பிராந்திய மொழி பயனர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட குறுகிய வீடியோ தளமான மோஜ், கூகிள் பிளே ஸ்டோரில் 80 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டி புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. இந்த மிகப்பெரிய மைல்கல்லை வேகமாக எட்டிய குறுகிய வீடியோ தளமாக மோஜ் ஆப் உருவெடுத்துள்ளது. டிக்டாக் இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக மாதாந்திர அடிப்படையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தொடர்ந்து செயலில் இருந்து வருவதாக ஷேர்சாட் தெரிவித்துள்ளது.