காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ட்வீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாததால், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டி அசாம் மாநில பாஜக உறுப்பினர்கள் காவல்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்.
அசாம் பாஜக மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் மூலமாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் "இந்தியாவின் பலம் ஒன்றியத்தில் உள்ளது" என்ற ட்வீட் தொடர்பாக காவல்துறையில் நூற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ராகுல்காந்தி வெளியிட்ட ட்வீட்டில், "நமது ஒன்றியத்தில்தான் பலம் உள்ளது. நமது கலாசாரங்களின் ஒன்றியம். நமது பன்முகத்தன்மையின் ஒன்றியம். நமது மொழிகளின் ஒன்றியம்.நமது மக்களின் ஒன்றியம்.நமது மாநிலங்களின் ஒன்றியம்.
காஷ்மீர் முதல் கேரளா வரை. குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை. இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது.இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்" என்று தெரிவித்திருந்தார்
ராகுல் காந்தி தனது ட்வீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாமல், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரித்து, நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கிறார், இது அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பதைப் போன்றது என்று புகார் கூறியுள்ள பாஜக, நாட்டின் எல்லை குறித்த விஷயத்தில் "சீனாவின் நிகழ்ச்சி நிரலில் அவர் இணைந்துள்ளார்" என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
"காஷ்மீர் முதல் கேரளா வரையிலும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் இந்தியா நீண்டுகொண்டிருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து வடகிழக்கு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் புவியியல் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என்று அசாம் பாஜக இளைஞரணி ஊடக ஒருங்கிணைப்பாளர் பிஸ்வஜித் கவுண்ட் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக அளித்துள்ள புகார்கள் மீது ஏதேனும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.