கேரள மாநிலத்தில் காணாமல் போன ஜெஸ்னா, முன்டக்கயம் பகுதியில் கடைக்குள் போகும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கல்லூரி மாணவி
ஜெஸ்னா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். விடுமுறை தினத்தில் சொந்த ஊர்
சென்றிருந்த ஜெஸ்னா, அங்கிருந்து தனது அத்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஜெஸ்னா தனது அத்தையை வீட்டிற்கு புறப்பட்டார்.
முதலில் ஆட்டோ ஒன்றை பிடித்து வெச்சூசிரா பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து எருமேலிக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து முன்டக்கயத்திற்கு பேருந்தைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் முன்டக்கயம் வந்த ஜெஸ்னா எங்கே போனார் என்று தெரியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்பது இதுவரை விடை தெரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெஸ்னாவை தேடினர். 50 நாட்கள் கடந்த பின்பும் வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால், காணாமல்போன ஜெஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்தது.
அவர் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற எண்ணத்தில், காவல்துறையினர் ஜெஸ்னா உடலை எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். அப்போது எருமேலியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதித்த காவல்துறையினர், ஜெஸ்னா பேருந்தில் இருந்து இறங்கி முன்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதை கண்டுபிடித்தனர். அத்துடன் முன்டக்கயம் செல்லும் வழியில், அவர் பேருந்தில் அமர்ந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் ஜெஸ்னா எங்கே போனார்? என்பதே விடையில்லா கேள்வியாக உள்ளது. இந்தத் தேடுதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் காவல்துறையினருக்கு ஒரு புதிய தடயம் கிடைத்துள்ளது. அதாவது முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கேமராவின் காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கையில் ஒரு பையுடனும், தோளில் ஒரு பையுடனும் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். இந்தக் காட்சிகளைக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதன்பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.