ஜார்க்கண்டில் கிராமத்தை வகுப்பறைகளாக மாற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் குறைவு காரணமாக சிறிது சிறிதாக அரசு பொதுமுடக்கத்திலிருந்து தளர்வுகளை வழங்கி வருகிறது.
அதில், கடைகள், மால்கள், கோயில்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பிற்கு மட்டும் தடை நீடிக்கிறது. இதனிடையே ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டருந்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறமிருக்க கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமில்லை எனவும் அவர்களால் செல்போன் எப்படி வாங்க முடியும் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களின் படிப்புக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா, துமார்த்தர் கிராமத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை அணுக முடியாத மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளில் ஒன்றான தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாணவர்களின் வீடுகளில் வெளிப்புற சுவர்களில் கரும்பலகையை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் மாணவர்களின் கிராமத்திற்கே வந்து ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “கொரோனா காரணமாக கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை. அதனால் இங்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து ‘உங்கள் வீட்டு வாசலில் கல்வி’ என்ற திட்டத்தை உருவாக்கினோம். மாணவர்களின் வீடுகளில் கற்பிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட கரும்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
தும்கா துணை ஆணையர் ராஜேஸ்வர் இந்த முயற்சியைப் பாராட்டியதோடு, மற்ற ஆசிரியர்களும் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூறுகையில், “கொரோனா பரவல் காரணமாக எங்கள் பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. எனவே நாங்கள் எங்கள் கிராமத்திலேயே படிக்கிறோம். எங்களுக்கான சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.