பிரதமர் மோடி கலந்து கொண்ட பேரணியில் சுனாமி போல் மக்கள் கூட்டம் ஆதரவு இருந்ததாக போட்டோஷாப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்பொழுதெல்லாம் சமூக வலைதளங்களில் நாள் ஒன்றுக்கே ஏகப்பட்ட போலி செய்திகள் பரவுகின்றன. அத்துடன் புகைப்படங்களும் மார்பிங் செய்யப்பட்டு உலா வருகின்றன. அப்படித்தான், சுனாமி போலான மக்கள் ஆதரவு கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் நாற்காலியில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
We support Dr Subramanian Swamy என்கிற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்திருந்தனர். அத்துடன் ஏகப்பட்ட பேர் அப்படத்திற்கு லைட் இட்டிருந்தனர். மோடி அலை ஏகப்பட்ட மக்கள் ஆதரவுடன் தொடங்கியிருப்பதாகவும் பலர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த புகைபடம் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய் ராம் தாகூர் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா மேடையில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை தான் போட்டோஷாப் செய்து, பிரதமர் மோடியின் பேரணியில் மகத்தான மக்கள் கூட்டம் இருப்பது போன்று காட்டப்பட்டது தெரியவந்துள்ளது. நிஜ புகைப்படத்தைக் காட்டிலும் அதிக மக்கள் கூட்டம் இந்த புகைப்படத்தில் இருப்பது போன்று போட்டோஷாப் செய்து படம் வெளியிடப்பட்டது தெரியவந்துள்ளது. படத்தை பார்த்த பலரும், எளிமையாக இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் போட்டோஷாப் செய்யப்பட்டிருப்பதாக சிலர் கலாய்க்கவும் செய்துள்ளனர்.