ஸ்தம்பிக்கும் வடமாநிலங்கள்; புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் லாரி ஓட்டுநர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்pt web
Published on

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாகியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய ஆங்கிலேயர் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய மூன்று குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்த மசோதாக்கள் சட்டமாகின.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடுமுழுவதும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இச்சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஷால் திவாரி என்பவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். இச்சட்டங்கள் காவல்துறையினருக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று குற்றவியல் மசோதாக்கள் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் இந்த மசோதாக்களில், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் செல்லும் அல்லது அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் செல்லும் ஓட்டுநர்களின் வழக்குகளில் ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதை எதிர்த்தும், மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் மும்பையில் பல்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வழக்கின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது.

லாரி உரிமையாளர்கள் சங்க ஓட்டுநர்கள் இது குறித்து கூறுகையில், "இந்த சட்டத்திருத்தம் முற்றிலும் நியாயமற்றது. விபத்தில் யார் மீது தவறு இருந்தாலும் முதலில் பெரிய வாகனத்தை செலுத்தும் ஓட்டுநர் மீதுதான் வழக்கு பதியப்படுகிறது. விபத்தினால் நாங்களும்தான் காயமடைகிறோம். ஆனால் எங்கள் சார்பாக பேச யாரும் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.

மும்பை பெருநகர பகுதிகளில் மதிப்பிடப்பட்ட 1.20 லட்சம் வாகனங்களில் 70%-க்கும் அதிகமான வாகனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம், வரும் நாட்களில் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வேலை நிறுத்தத்தின் மூலம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.120 முதல் ரூ.150 கோடி வரை இழப்பீடு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மும்பை பெங்களூரு நெடுஞ்சாலையில் கூடுயிருந்தவர்களை கலைக்க காவல்துறையினர் முயற்சித்தபோது, நடந்த தாக்குதலில் காவலர் ஒருவர் காயமடைந்தார். தானே மாவட்டத்தில் உள்ள மிரா பயந்தர் பகுதியில் மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுக்க ஓட்டுநர்கள் முயன்றபோது காவல்துறையினர் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவும் காவலர் ஒருவர் காயமடைந்தார். காவல்துறையினரின் வாகனமும் சேதமடைந்துள்ளது.

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது அடுத்தடுத்த நாட்களுக்கு தொடர்ந்தால் வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையை உணர முடியும் எனத் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் டீலர்கள், பங்க் உரிமையாளர்கள் 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளை ஸ்டாக் வைத்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com