லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்

லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்
லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டிய டிரைவர் : ரூ.2 ஆயிரம் அபராதம்
Published on

லுங்கி கட்டிக்கொண்டு லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

2019ஆம் ஆண்டு வாகன சட்ட திருத்த மசோதா இந்தியாவில் சில மாநிலங்களை தவிர பெரும்பாலான இடத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் படி, சாலை போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சில மாவட்டங்களில் 25 ஆயிரம், 10 ஆயிரம் என அபராதங்கள் விதிக்கப்படும் செய்திகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் அரிய வகை அபராதம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஓட்டுநர் ஒருவர் லுங்கி கட்டிக்கொண்டு லாரியை ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. லுங்கி கட்டிக்கொண்டு ஓட்டுவது எதார்த்தமான ஒன்று என ஓட்டுநர் வாதம் செய்துள்ளார். ஆனால் சட்டப்படி தவறு என போக்குவரத்து துறை போலீஸார் அபராதம் வசூலித்துள்ளனர். 

இதுதொடர்பாக லக்னோவின் போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங் கூறும்போது, ஆடை ஒழுங்கு என்பது 1989ஆம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருக்கும் சட்டம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகவும், 2019ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கனரக வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் இது கட்டாயம் என்றும், ஆனால் இதுவரை கடுமையாக பின்பற்றப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சட்டத்தின்படி, கனரக வாகன ஓட்டுநர்கள் பேண்ட், சர்ட் அல்லது டி-சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே இது குறிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் கங்காபால் பேசும்போது, “சட்டத்தின்படி லாரி, டிரக் மற்றும் இதர வகை கனகர வாகன ஓட்டுநர்கள் லுங்கி மற்றும் உள்ளாடைகளுடன் வாகனத்தை ஓட்ட அனுமதி கிடையாது. அவர்கள் ஃபுல் பேண்ட், சரியான சட்டை மற்றும் ஷூக்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமின்றி கிளினர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் இது பொருந்தும். இந்த விவகாரத்தில் அரசு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் எந்த கருணையும் காட்டப்படமாட்டாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com