`இது என்னை எங்கே அழைத்துச்செல்லுமோ...’- டீ போட்ட கையோடு எம்.பி போட்ட சூசக ட்வீட்!

`இது என்னை எங்கே அழைத்துச்செல்லுமோ...’- டீ போட்ட கையோடு எம்.பி போட்ட சூசக ட்வீட்!
`இது என்னை எங்கே அழைத்துச்செல்லுமோ...’- டீ போட்ட கையோடு எம்.பி போட்ட சூசக ட்வீட்!
Published on

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பியான மெஹுவா மொய்த்ரா டீ போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு விரைவில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. மெஹுவா மொய்த்ரா, டீ போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த மொய்த்ரா, அம்மாநிலத்தின் கிருஷ்ணா நகர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர், பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருபவர். சமீபத்தில்கூட நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது ‘பப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் பல கேள்விகளைக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மொய்த்ரா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்த நிலையில், மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலைக் கருத்தில்கொண்டு அதன் பிரசாரத்திற்காக களத்தில் இறங்கியிருக்கும் மொய்த்ரா, தன்னுடைய சமூக வலைத்தளமான ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் சாலையோர கடையில் உள்ள தேநீர் பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கிறார். பின்பு, அதை கடைக்காரரிடம் கொடுக்கிறார். இதை அங்குள்ள மக்கள் கண்டுகளிக்கின்றனர். இந்த வீடியோவை ஷேர் செய்து, "தேநீர் தயாரிக்க முயற்சி செய்தேன். இது என்னை எங்கு அழைத்துச் செல்லும் என்று யாருக்குத் தெரியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது, இந்தப் பதிவு பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி, தன்னுடைய சிறு வயதில் ரயில் நிலையங்களில் டீ விற்றதாக பல இடங்களில் குறிப்பிட்டிருப்பார். அதை மையமாக வைத்தே, இந்த கருத்தை அவர் பதிவிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வைக்கப்படுகின்றன. இதுதவிர சிலர், “இது மசாலா டீயா அல்லது சாதா டீயா” எனவும் “எம்.பி. இனி சாய்வாலி” எனவும் அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் ஒருவர், "நீங்கள் உயர் பதவிக்கு செல்ல தேநீர் தயாரித்துவிட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மாநில முன்னாள் பாஜக தலைவர் சந்திர குமார் போஸ், "இது உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்று உங்களுக்கே தெரியும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல அவரின் இந்த பதிவுக்கு நாகா மக்கள் முன்னணி (NPF) தலைவர் குசோலுசோ அசோ நீனு, `ஒருவேளை, அடுத்த பிரதமராக இருக்கும்’ என்றுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக அதிரடியாகக் கருத்துகளை வெளியிடும் மொய்த்ரா, அதேநேரத்தில் தன்னுடைய பொழுதுபோக்கு படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளுவார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கூலிங் கிளாஸுடன் புடவையில் கால்பந்து விளையாண்ட வீடியோவும், மஹா பஞ்சமி விழாவில் நடனமாடிய வீடியோவும் பயங்கர வைரலாயின. இவருடைய ட்விட்டர் பக்கத்தை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதனால் அவர் பதிவிடும் வீடியோக்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே வைரலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com