நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளிடமும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த வகையில், அரசினுடைய இல்லங்கள், விடுதிகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆளும் கட்சி வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது. அவற்றைப் பிரசார அலுவலகங்களாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் பாஜவுக்காக தீவிர பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஆந்திராவிலும் பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், ”ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதற்காக அவர் விமானப் படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார். தேர்தல் பரப்புரைக்காக செல்லும்போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்.
விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்.
’தேர்தல் தேதியை அறிவித்தபிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம். ஒருவேளை, IAF ஹெலிகாப்டரை, பாஜக வாடகைக்கு எடுத்திருந்தால், அந்த ஹெலிகாப்டர் ஏன் அவசியம் என்பதை தேர்தல் ஆணையம் நம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். தேர்தல் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிடாது என்பதாலேயே தாம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது
இதுதொடர்பான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது ஓர் ஊழல் நடைமுறையாகும். இதற்காக 1975ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்திரா காந்தி. இவரது வெற்றி குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தேர்தலின்போது இந்திரா காந்தி, கெஜட் பதிவு பெற்ற அரசு அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூரை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் என புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வெற்றி நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.
இதேபோன்ற ஒரு சம்பவத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது, ஜெயலலிதாவும் செய்ததாக, கருணாநிதி அப்போது கேள்வி எழுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் ஜெயலலிதா செய்த தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளையும் ஊடகங்கள் விமர்சித்து எழுதியிருந்தன. அதாவது, தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கைகளை எல்லாம் அந்தந்த கட்சி அலுவலகத்திலிருந்துதான் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அதிமுக கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கையை கட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பாமல், அரசு மெயில் ஐடி மூலம் அனுப்பியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.