மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின இளைஞர் முகத்தில் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்து அவமதித்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவருக்குப் பாத பூஜை செய்து மன்னிப்புக் கோரினார். மேலும் ப்ரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான வீடு பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஸ்மத் ராவத் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், "இப்போது என் வீட்டின் முன்பு போலீசார் உள்ளனர், ஆனால் இது ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டுமே. அவர்கள் என்னை கடத்தினாலோ அல்லது தாக்கினாலோ நான் என்ன செய்வது? அரசாங்கத்திடம் நான் கேட்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு மட்டுமே.
இந்தச் சம்பவத்தைப் பற்றி நான் புகார் செய்யவில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்தேன். பிரவேஷ் சுக்லா பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை, அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டேன்'' என்றார் அப்பாவித்தனமாக.
இது இன்னும் இந்தப் பகுதிகளில் சாதி ஆதிக்கம் எவ்வளவு தலைதூக்கி ஆடுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. மேலும் 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போபாலுக்கு முதலமைச்சரை சந்திக்க தஸ்மத் ராவத் அழைத்துச் செல்லப்பட்டது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியாததால் அவர்கள் கவலையடைந்தனர்.
மேலும் தனது முகத்தில் சிறுநீர் கழித்து அவமதித்த வீடியோ வைரலாக பரவிய நேரத்தில், 'வீடியோவில் இருப்பது நானே இல்லை' என்று தஸ்மத் ராவத் எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறார். உண்மையை சொன்னால் ஏதேனும் பிரச்சினையாகி விடுமோ எனப் பயந்து பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஸ்மத் ராவத் முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று காவல்துறையினரிடமும், தனது ஊர் மக்களிடமும் பொய் சொல்லி மறுத்து வந்திருக்கிறார். ஆனால் சிறுநீர் கழித்ததை பிரவேஷ் சுக்லா ஒப்புக்கொண்ட பிறகே அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என தஸ்மத் ராவத் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத் கூறுகையில், ''சுமார் 10 நாட்களுக்கு முன்பு வேகமாக பரவிய அந்த வீடியோவை என்னிடமும் காட்டினார்கள். ஆனால் வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று மறுத்துக்கொண்டே இருந்தேன். என் கிராமத்தில் உள்ள பலர் கூட இது நீதான் என்று சொன்னார்கள். அவர்களிடம்கூட நான் உண்மையை சொல்லவில்லை. பிரவேஷ் சுக்லா ஒப்புக்கொள்ளும் வரை நான் உண்மையை சொல்லவில்லை'' என்கிறார் அவர்.
மேலும் பிரவேஷ் ஏன் உங்கள் மீது சிறுநீர் கழித்தார் என்று கேட்டதற்கு, ஒரு கணம் நிதானித்து, "எனக்கு அவருடன் எந்த தகராறோ சண்டையோ இல்லை. அவர் குடிபோதையில் அவ்வாறு செய்துவிட்டார்" என்கிறார் தஸ்மத் ராவத்.
சம்பவத்திற்குப் பிறகு பிரவேஷை சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, "அவரது வீடு குப்ரி கிராமத்தில் உள்ளது, எனது வீடு கரவுந்தி கிராமத்தில் உள்ளது. எங்கள் மார்க்கெட் குப்ரியில் உள்ளது, அதனால் நான் அவரை பலமுறை பார்த்தேன். ஆனால் அவரும் நானும் இதுபற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் பற்றி நான் என் குடும்பத்தில் யாரிடமும் சொல்லவில்லை'' என்கிறார் தஸ்மத் ராவத்.
பிரவேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீடு மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டதால் அவரது மனைவி, மூன்று வயது மகள் மற்றும் வயதான பெற்றோர் வீடற்றவர்களாக நிற்கின்றனர். ஒருவர் செய்த தவறுக்கு அவரது மொத்த குடும்பத்தினரையும் ஏன் தண்டிக்க வேண்டும் என்று பிரவேஷின் தந்தை கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அவர், இந்த வீடு பிரவேஷ் உடையது அல்ல என்றும் அவரது மனைவியின் பாட்டியால் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்.