இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து யுடியூப்பில் ஆவி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆவி இருக்கா? இல்லையா? யுடியூப்பில் இதுதான் இன்றைக்கு வைரல் கான்செஃப்ட். இதற்கு விடைதேடும் விதமாக The Japes என்ற வடநாட்டு வலைதளம் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒருநபர் பேய் போல வெள்ளை உடை அணிந்தபடி தலைவிரி கோலமாக வேஷமிட்டுக் கொண்டு நடு ராத்திரில் உலா வருகிறார். அவர் நடு இரவில் எதிர்ப்படும் ஆட்களை ஒளிந்திருந்து பயமுறுத்த செய்கிறார். பேய் வடிவில் அவரை நடு இரவில் கண்ட அத்தனை நபர்களும் அலறி அடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
இப்படி தெருமுனையில், நடு வீதியில், கார் ஸ்டாண்டில் என எதிர்ப்படும் அத்தனை பேரும் இவரது வேடத்தைக் கண்டு மிரண்டனர். காரில் வந்த இளைஞர்களிடம் பேய் வேடமிட்டவர் தாவி குதித்து எதிர் கொண்டபோது அந்தக் காரின் உள்ளே இருந்த நான்கு இளைஞர்களும் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி ஒன்றும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் ஆவியைக் கண்டு அலறவே செய்தனர். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தபோது அவர்களின் வலைத்தளத்தில் இதுவும் ஒரு வழக்கமான வீடியோவாகவே இருக்கும் என்றே இந்த டீம் நினைத்தது. ஆனால் அவர்களை அசர வைக்கும் விதத்தில் இப்போது இந்த ஒரு வீடியோ மட்டும் 25,766,361 பேர் கண்டுக்களித்துள்ளனர். 2 கோடி நபர்களை தாண்டி வைரலான இந்த வீடியோ இப்போது இந்தி ஊடகங்களில் டாப் நியூஸ்.
இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. இதை போல பல வீடியோக்கள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. அதனை அப்படியே இந்திய மனநிலைக்கு ஏற்ப எடுத்து வெளியிட்டு ட்ரெண்ட் ஆக்கி உள்ளது The Japes இளைஞர் குழு. இந்த வீடியோவை முன்மாதிரியாக வைத்து இந்திய மொழிகள் பலவற்றில் பலரும் அதே போல வீடியோவை அப்லோட் செய்து வருகிறார்கள்.
2 கோடிக்கும் மேல் இந்தப் பேய் வீடியோவிற்கு ஆதரவு கிடைத்துள்ளதால் அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை கூட வெளியிட்டுள்ளது The Japes. அதற்கும் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வந்து குவியத் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்தான் ஆவி கதைகளுக்கு மவுசு அதிகம் என எதிர்பார்த்தால் யுடியூப் வாசிகளுக்கும் அது அட்சய பாத்திரமாக மாறியுள்ளது.