சபரிமலைக் கோயிலில் சிறப்பு தரிசனம் முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அன்னதான திட்டத்திற்கு நிதி வழங்கினால், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் முறை இருந்தது. இந்நிலையில், சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோருக்கான சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தேவஸ்தான புதிய தலைவர் ஏ.பத்மகுமார் கூறும்போது, ‘முந்தைய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த திட்டத்தை ரத்து செய்கிறோம். ஏற்கனவே நன்கொடை அளித்தவர்களுக்கு சிறப்பு தரிசன அனுமதி உண்டு. பக்தர்கள் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தவே இந்த நடவடிக்கை. தேவஸ்தானத்தில் பொருளாதார நெருக்கடி ஏதும் இல்லை. சபரிமலைக்கு 63 ஏக்கர் நிலம் உண்டு. ஆனால், 55 ஏக்கர்தான் போர்டு வசம் இருக்கிறது’ என்றார்.