மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பீனிக்ஸ் மாலிற்குள் நுழைய திருநங்கை ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த திருநங்கை சோனாலி தால்வி. வயது 31. சமூவ ஆர்வலராக உள்ளார். அத்தோடு என்ஜிஓ-வாகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை புனேவில் உள்ள பீனிக்ஸ் மாலிற்கு சென்றிருக்கிறார். ஆனால் மாலிற்குள் நுழைய சோனாலிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. வாசலில் பணியில் இருந்த பெண் காவலாளி ஒருவர் சோனாலியை மாலிற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கிறார். உடனே சோனாலியோ, ‘எதற்காக என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள்’ என கேட்க, மூத்த காவலாளிகள் திருநங்கைகளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என தன்னிடம் கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அந்த பெண் காவலாளி.
பின்னர் அங்கு சிலர் கூடி அவரை அனுமதிக்க வலியுறுத்தியதால் உள்ளே செல்லலாம் என கூறியதாகவும் ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுக்கு செல்லக்கூடாது என தெரிவித்ததாகவும் சோனாலி தால்வி கூறியுள்ளார். இதனிடையே நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்றும் சோனாலி கூறியுள்ளார். இந்நிலையில் சோனாலியின் குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. சோனாலி ஐந்து நிமிடத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.