மத்திய பிரதேசத்தில் ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு பள்ளி மாணவர்கள் சிலர் இன்று காலை வந்துள்ளனர். அப்போது அவர்களின் ஒருவரான சுஹைல் மன்சூரி (16) என்ற சிறுவன், அங்கு நின்றுக் கொண்டிருந்த ரயில் இஞ்சினின் மீது திடீரென ஏறினார்.
அங்கிருந்தவர்கள் எச்சரித்த போதிலும், அதனை கேட்காமல் அவர் இஞ்சின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அவர், ரயிலுக்கு மேற்பகுதியில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியின் மீது அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுஹைல் உயிரிழந்தார்.
சிறுவன் உயிரிழந்ததால் அங்கிருந்த சில இளைஞர்கள் ஆத்திரமடைந்து ரயில் நிலைய அதிகாரியின் அறையை சூறையாடினர். பின்னர், ரயில்வே போலீஸார் அங்கு வந்து அவர்களை கலைந்து போக செய்தனர்.
நாட்டில் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த சம்பவம் செல்ஃபியின் ஆபத்தை மீண்டும் உணர்த்துவதாக இருக்கிறது.