ரயில் வரும் நேரம் தாமதம் ஆனால் இனி டிரைவரே வேகத்தை அதிகரிக்கலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 சதவிகிதம் ரயில்கள் இந்தியாவில் தாமதமாக வந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தை தவிர்க்க புதிய உத்தரவை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது. இந்த புதிய முறைப்படி, ரயில் தாமதம் ஆனாலோ அல்லது இறுதி நேரத்திலோ ரயிலின் வேகத்தை டிரைவரே அதிகரிக்கலாம். இதற்கு முன்னர் 110 கி.மீ வேகம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சராசரி வேகம் என்பது 40 முதல் 50 கி.மீ வேகமாக இருந்தது. அதேபோன்று 130 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் சராசரி வேகம் 80 முதல் 90 கி.மீ ஆக இருந்தது.
இந்நிலையில் புதிய முறைப்படி 110 கி.மீ வேகம் கொண்ட ரயிலை, அதன் டிரைவரே 105 கி.மீ வரை வேகத்தில் இயக்கலாம். அதேபோன்று 120 கி.மீ வேகம் கொண்ட ரயிலை 115 கி.மீ வரை டிரைவரே இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிரைவர்கள் யாரிடமும் உத்தரவு பெறத்தேவையில்லை. இதற்கு முன்னர் உத்தரவு பெறமால் ரயிலை வேகமாக இயக்குவது தண்டனைக்குரிய ஒன்றாக ரயில்வே துறையில் இருந்தது. இதனால் ரயில்கள் தாமதங்களாக வந்து சேர்ந்தன. இந்நிலையில் தாமதத்தை போக்க, இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.